ரிஷப ராசி பலன்கள் (2017-2020)

ரிஷபம் – அஷ்டம சனி :

ரிஷபம் இராசி அன்பர்களே: 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு இது அஷ்டம சனி. ஐயோ சனி 8ஆம் இடத்திற்கு வந்து விட்டதே? என்று பயப்பட வேண்டாம். ரிஷபம் இராசிக்கு சனி யோககாரகர். அஷ்டம சனியாக வந்தாலும் கெடுக்க மாட்டார் என நம்பலாம். ரிஷபம் இராசிக்கு சனி தர்ம-கர்மாதிபதி. அவர் 2ஆம் இடத்தை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், குழப்பங்கள் தீரும். திருமணம் தடைபட்டு இருந்தால் திருமணம் நடக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மேலும் யோக காரகர் சனி பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இழுத்துக்கொண்டு இருந்த வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொத்து-சுகங்கள் தேடி வரும். பல நாட்களாக வாட்டி வந்த நோய், நொடிகள் நீங்கி நலம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8ஆம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் துவங்குவீர்கள். தொழிலில் நண்பர்களையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் உஷாராக இருங்கள். காரணம், 7ஆம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். ஆனாலும் பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவான் சந்நிதியில் எள் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!