மிதுன ராசி பலன்கள் (2017-2020)

மிதுனம் – சப்தம சனி:

மிதுனம் இராசி அன்பர்களே: 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரையில் 6-ம் இடத்தில் இருந்த சனி பகவான், இப்போது உங்கள் ராசி/லக்கினத்திற்கு 7ஆம் இடத்திற்கு வந்திருக்கிறார். உங்கள் இராசிக்கு 8,9-க்குரிய சனி, 7ல் வந்திருப்பது நன்மையே தரும். பொதுவாக பாக்கியாதிபதி, சப்தமஸ்தானத்திற்கு வந்தால் எப்பேர்பட்ட பிரச்னையாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு. உயர்கல்வி அமையும். அடமானத்தில் இருந்த பொருட்கள் கடன் தீர்ந்து கைக்கு வந்து விடும். புதிய வாகனம் வாங்கக்கூடிய சாதகமான நேரம் இது. ஆனாலும், ஜென்ம இராசியை சனி நோக்குவதால் அலைச்சல் அதிகரிக்கும். காரணம், தொழில், வேலை என்று புதிதாக அமைத்து தந்துவிடுவார் சனிபகவான். அதனால் அப்படிதான் இருக்கும். அதோடு சற்று டென்ஷனும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக குடும்பத்தினர் கேட்டு வந்ததை வாங்கி தரும் யோகம் வந்து விட்டதால் அதை பூர்த்தி செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் மனைவியால் நன்மை அடைவார்கள். பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை படைப்பீர்கள்.

பரிகாரம்: சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!