தனுசு ராசி பலன்கள் (2017-2020)

தனுசு – ஜென்ம சனி:

தனுசு இராசி அன்பர்களே: 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. சனிபகவான் உங்கள் ஜென்மத்தில் வந்தமர்ந்து விட்டார். ஏற்கனவே ஏழரை சனி, தீராத குறைக்கு ஜென்ம சனியுமா? என்று பயப்பட வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வரவிருப்பதால், கெடுதல் செய்ய மாட்டார் என நம்பலாம். கீர்த்திஸ்தானம், சப்தமஸ்தானம், ஜீவனஸ்தானத்தை சனிபார்வை செய்வதால், சகோதர-சகோதரிகளுக்கு யோக காலம்தான். திருமணம் தடைப்பட்டு இருந்திருந்தால் இனி கவலையில்லை. திருமணம் பிரமாதமாக நடந்து விடும். போட்டி-பந்தயங்களில் வெற்றி கொடுக்கும். ஷேர் மார்கெட்டில் சிறிய லாபம் கிடைக்கும். திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ஸ்தானத்திற்கு 6-ம் இடத்தை பார்வை செய்வதால் பெரிய முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். அவசரம் பரபரப்பு வேண்டாம். பலநாட்களாக வாகனத்தை மாற்ற வேண்டும் புது வாகனம் வாங்க வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறும். பழைய கடன் வசூலாகும். திருமணம் ஆனவர்கள் மனைவியின் உடல்நலனில் சற்று கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவருக்கு உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பிரச்னைகள் வரலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் நன்றாக அமையும். பொதுவாக ஜென்ம சனியாக இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று பலமாக வீசும்.

பரிகாரம்: அஞ்சனை மைந்தனை வணங்குங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணை படைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!