சிம்ம ராசி பலன்கள் (2017-2020)

சிம்மம் – பிரச்சினைகள் தீரும்:

சிம்மம் இராசி அன்பர்களே: 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. அர்தாஷ்டம சனி விலகி விட்டது. அப்பாடா விட்டது தொல்லை என்று நிமிர்ந்து உட்காருங்கள். இப்பொழுது உங்கள் ராசி/லக்கினத்திற்கு பஞ்சம பஞ்சம திரிகோண ஸ்தானமான 5ஆம் இடத்திற்கு சனி பகவான் வந்து விட்டார். கேந்திராதிபதி திரிகோணத்தில் அமர்ந்து விட்டார். வாட்டி வதைத்த பிரச்னைகள் தீர்ந்து விடும். வதங்கிய பயிறும் வளர ஆரம்பிக்கும். இனி எப்படி போவது? எல்லாம் முட்டு சந்தாக இருக்கிறதே? என்ற கவலை இல்லை. சிக்கலான பாதை சீராகி விட்டது. உங்களுக்கு உதவி செய்ய நல்ல மனம் படைத்தவர்கள் அவர்களாக முன்வந்து உதவி செய்வார்கள். உங்கள் திட்டம் எல்லாமே கச்சிதமாக முடியும். குடும்பத்தில் சச்சரவுகள், குழப்பம் இருந்தாலும் தீர்ந்து விடும். கையில் பஞ்சை எடுத்தாலே அது நூலாக மாறி விடும். போன சனிப்பெயர்ச்சியில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா நஞ்சமா? இனி அதுபோல் கஷ்டங்கள் இந்த சனி பெயர்ச்சியில் வராது. என்னென்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டு நிறைவேற்ற நினைத்தீர்களோ அத்தனையும் அருமையாக செய்து முடிப்பீர்கள். பஞ்சம திரிகோண ஸ்தான சனி, வேலை, தொழில், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற எல்லாவிதமான சுப மங்கல விஷேசங்கள் அத்தனையும் தரும். வாழ்க்கையே பாதகம் என்று வெறுத்து இருந்த உங்களுக்கு இனி வாழ்க்கையே சாதகம்தான்.

பரிகாரம்: சனிக்கிழமையில் நீல நிற வஸ்திரத்தை தானம் செய்யுங்கள். வியாழக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதத்தை 9 பேருக்கு தானம் செய்யுங்கள். சனி பகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!