கடக ராசி பலன்கள் (2017-2020)

கடகம் – இராஜயோகம்

கடகம் இராசி அன்பர்களே: 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்கள் இராசி/லக்கினத்திற்கு 6ஆம் இடத்திற்கு சனி பகவான் வந்துவிட்டார். நினைத்ததை நடத்தி வைப்பார் சனி பகவான். நீங்கள் போடும் திட்டங்கள் அத்தனையும் வெற்றிதான். 6ஆம் இடத்தில் அமர்ந்த சனி 8ஆம் இடத்தையும், 12ஆம் இடத்தையும் பார்வை செய்வதால் விரோதிகள், விரோதங்கள் பஞ்சு போல் பறந்து விடும். இதுநாள்வரை இருந்த வீண் விரயங்கள் இனி இருக்காது. பணவரவு தாராளமாக இருக்கும். 3-ம் இடத்தை பார்வை செய்வதால் தைரியலஷ்மியே உங்கள் வசம்தான். புதிய தொழில் பெரிய அளவில் அமையும். வெளிநாட்டு பயணமும், வெளிநாட்டவர்களால் லாபமும் உண்டு. தூங்கி கொண்டு இருந்தவர்களை இனி 6-ம் இடத்து சனி பகவான் தட்டி எழுப்புவார். புதிய நண்பர்களால் மிகுந்த ஆதாயம் உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெறும். சுபநிகழ்ச்சிக்காக கடன் வாங்க வைக்கும். ஆகவே திட்டமிட்டு செலவு செய்யுங்கள். வேலைக்கு அலைந்துக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். பொதுவாக, 7,8-க்குரிய சனி 6-ம் இடத்தில் அமர்ந்ததால், கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம்என்பதற்கேற்ப இனி உங்களுக்கு இராஜயோக வாழ்க்கைதான்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் புளியோதரை சாதத்தை 8 பேருக்கு தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!